எல்லையில் படைகளை குவித்த ரஷ்யா-எந்நேரமும் போர் மூளும் அபாயம்-48 மணிநேரம் கெடு விதித்த உக்ரைன்.!!

கியிவ்: எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்துள்ள சம்பவம் குறித்து 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது.

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். மொழி, கலாச்சார விவகாரத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் உக்ரைன் மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இதனால் இரு நாடுகளும் எப்போதும் கீரியும் பாம்புமாகவே மோதல் போக்கை கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து உக்ரைன்- ரஷ்யா இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயலுவதாகவும் குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா லட்சக்கணக்கான படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

உக்ரைன் மீது போர் தொடுப்பதற்காகவே ரஷ்யா இது போல் படைகளை குவித்து வருகிறது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை கைவிடுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. ஆனால் ரஷ்யாவோ போர் நடத்துவதற்காக படையில் வீரர்களை குவிக்கவில்லை என்கிறது.

போர் நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால் எதற்காக எல்லையில் படைகளை குவிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழியாக குண்டுகளை வீசி போரை தொடங்கலாம் என அமெரிக்கா தனக்கு கிடைத்த உளவுத் துறை தகவலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களையும் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. இது போல் 12க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை தாய்நாட்டுக்கு திரும்ப வந்துவிடுமாறு அழைக்கிறார்கள்.

மற்ற நாடுகளுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறி வருகிறார்கள். இதனால் படையெடுப்பு குறித்த அச்சம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக பேரணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது குறித்து விவாதிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யாவை உக்ரைன் அழைத்து கெடு விதித்துள்ளது. அது போல் ரஷ்யா பங்கேற்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.