வியாபாரம் என்று வரும்போது ஹிந்தி வேணுமாம் .. திமுக-வை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்..!!

கோவை: வியாபாரம் என்று வரும்போது, இந்தி திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்து கொள்வதாக, திமுக குறித்து வானதி சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியீடுகிறது.

இதையடுத்து, இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், ஆமீர்கான், நாக சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தி எதிர்ப்பை பதிவு செய்யும் தமிழகத்தில், இந்தி படத்தை வெளியிடுவதால் வரும் எதிர் கருத்துகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?’ என்று உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் ”எப்போதும் ‘இந்தி தெரியாது போடா’ என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான். மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதும் நாம் சொன்னது கிடையாது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கற்றுகொள்ளலாம். ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டது தான் ஆக வேண்டும் என்று யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை” என்றார்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மாநிலத்தில் இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தி படமான அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது. அத்துடன், ஹிந்தி தேவை என்பதுபோல், இப்போது திமுக மாற்றி பேசுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தெற்கு தொகுதிக்குட்பட்ட ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் தேசிய கொடிகளை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் சொன்னதாவது: நாட்டு மக்கள், 75வது சுதந்திர தினத்தை திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். திமுகவினர் அரசு பள்ளி குழந்தைகள் இந்தி கற்றுக்கொள்வதை எதிர்க்கின்றனர்.

ஆனால், தனிப்பட்ட குடும்பம், தனிப்பட்ட வியாபாரம் என்று வரும்போது, இந்தி திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்துகொள்கின்றனர். தமிழகத்தில் ஏழை, எளிய குழந்தைகளை இன்னொரு மொழி கற்க எதிர்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொருவரும் தாய் மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார்.அந்தக் கொள்கையை தான் திமுக எதிர்கிறது. நாங்கள் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்” என்றார்.