சாக்கடையில் தங்க துகள்கள் சேகரித்த போது விஷ வாயு தாக்கி13 வயது சிறுவன் பலியான சோகம் ..

கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைகளை வடிவமைக்கும் போது சேதாரமாகும் கண்ணுக்கு தெரியாத தங்க துகள்கள் பட்டறைகளை சுத்தம் செய்யும்போதும், காற்றில் பறந்தும் சாக்கடையில் கலக்கின்றன. இதேபோன்று சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கோவையில் நகை பட்டறை மிகுந்த பகுதிகளில் தங்கி இருந்து இந்த தங்கத் துகள்களை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். தினசரி 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த பாலன் (வயது 40) என்பவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரித்து வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்கத் துகள்கள் இருந்தால் பிரித்து விற்பனை செய்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13) நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்த விஷவாயு தாக்கி விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் . விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து வெறைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.