அது என்ன டைம் அவுட் விதி… ஆடாமா அவுட் ஆன வங்கதேச கேப்டன்..!!

உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் செய்தது சரியா, தவறா என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற  போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் ஆக்கப்பட்ட விதம் பேசுபொருளாகியுள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டத்தின் 25-வது ஓவரில் டைம் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்யப்பட்டார்.

இலங்கை அணி 25-வது ஓவரின்போது சதீரா சமரவிக்கிரமவின் விக்கெட்டினை இழந்தது. இலங்கை அணிக்காக அடுத்த வீரராக களம் கண்டுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். அவர் தவறுதலாக பட்டை சரியில்லாத ஹெல்மட்டை மாற்றி எடுத்து வந்துள்ளார். இதனால் மாற்று ஹெல்மட் வரும் வரை மேத்யூஸ் பேட் செய்யாமல் காத்திருந்துள்ளார்.

இதனையடுத்து, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விக்கெட் கேட்டு முறையீடு செய்ய கள நடுவர்கள் சிறிது ஆலோசனைக்குப் பிறகு மேத்யூஸுக்கு டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் தாமத்துக்காக விளக்கமளித்தும் அதனை வங்கதேச அணியும், கள நடுவர்களும் ஏற்க மறுத்துவிட்டனர்.

டைம் அவுட் விதியின்படி ஒரு வீரர் ஆட்டமிழந்த பிறகு அல்லது காயம் காரணமாக பெவிலியன் திரும்பும்போது களமிறங்க வரும் புதிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் முதல் பந்தினை சந்தித்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த புதிய பேட்ஸ்மேன் டைம் அவுட் முறைப்படி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார்.

ஐசிசி நடத்தும் போட்டிகளில் வீரர் ஒருவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்த வீரர் 2 நிமிடங்களுக்குள் களமிறங்கி முதல் பந்தினை சந்தித்திருக்க வேண்டும்.

இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தரப்பிலிருந்து விளக்களித்தும் விடாப்பிடியாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் அவுட் கேட்டு முறையீடு செய்துள்ளார். கிரிக்கெட் விதிப்படி அவர் செய்தது சரியாக இருந்தாலும், விளையாட்டின் மாண்பை (ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்) அவர் கடைபிடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் ஏஞ்சலோ மேத்யூஸின் ஆட்டமிழப்பு குறித்து அவர்களது விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.