என்னது… மீண்டும் வெள்ளைக் கொடிக்கு வேலை வந்துவிட்டதா… அடங்கிப் போகும் அமெரிக்கா-ஈரானுக்கு விதித்த கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு..!

வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்கவும், உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகத்தை அதிகரிக்க சண்டை நாடுகளான ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இறங்கி செல்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா 3வது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இதை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

மேலும் ரஷ்யாவுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதோடு, பெட்ரோல், டீசல் மீதான விலையும் அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியியில் அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அத்துடன் ஏற்றுமதியை பொறுத்தமட்டில் சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அதாவது ரஷ்யா ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. இதனால் பொருளாதார தடைகள் மூலம் ரஷ்யாவை ஒதுக்கி வைத்தால் அது முன்பு இல்லாத வகையில் விலை ஏற்றத்தை கொடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த காரணங்களால் தான் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான தடையை இன்னும் ஐரோப்பா பரிசீலிக்கவில்லை என ஜெர்மனி கூறியுள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்கா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. தற்போது ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 111.3 அமெரிக்க டாலராக உள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 43 சதவீதம் உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு இறக்குமதியை அமெரிக்கா தடை செய்துள்ள நிலையில், 2022 இறுதியில் கொள்முதலை நிறுத்துவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. பிற நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வாங்குவதில் தற்போது எந்த தடையும் இல்லை எனினும் இது எதிர்காலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும்.

இதனால் அமெரிக்காமாற்று வழியை யோசித்து வருகிறது. அதன்படி ஈரான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்த நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதித்த அமெரிக்கா வேறு வழியின்றி தற்போது இறங்கி வந்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக தான் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. மேலும் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் பொருளாதார தடைகள் விலக்கி கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்மூலம் சில மாதங்களில் ஈரான் தனது கச்சா எண்ணெயை ஒரு நாளைக்கு சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்களில் இருந்து 4 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறினர். இதேபோல் 2019ல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தளர்த்துவதற்காக வெனிசுலாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று வெனிசுலாவும் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவால் வெனிசுலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏக்கு(PDVSA) கடன் தீர்ப்பதற்கு எண்ணெய் சரக்குகள் பெற ONGC Videsh Ltd (OVL) நிறுவனத்தை அனுமதிக்க அமெரிக்காவுடன், இந்திய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி டெலாய்டின் இந்திய பங்குதாரர் தேபாசிஷ் மிஸ்ரா கூறுகையில், “அமெரிக்காவின் பணவீக்கம் 7.9 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத உயர்வு. அமெரிக்காவால் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஈரான், வெனிசுலா உள்பட பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை அதிகம் பெற அமெரிக்கா நிச்சயம் முயற்சிக்கும்” என்றார்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இந்த முடிவை அறிவித்தது. இருப்பினும் ஈரான் மற்றும் வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதை ஆதரிப்பதாக பகிரங்கமாக கூறியது. மேலும் எண்ணெய் வாங்குவதற்கான கூடுதல் விருப்பங்களையும் இந்தியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.