உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தமிழக மாணவர்கள்..பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர்- பரிவுடன் நலம் விசாரிப்பு.!!

சென்னை : உக்ரைன் நாட்டில் போர் காரணமாக சிக்கியிருந்த தமிழக மாணவர்களின் கடைசி குழு தமிழகம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வாரங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

தலைநகரான கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் பக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்பட்டு, போர் மூர்க்கமாக நடைபெற்று வருகிறது.

உக்ரைனின் பல பகுதிகளில் இன்னும் பல மாணவர்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது. மேலும் 15 ஆயிரம் மாணவர்கள் அங்கு தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டன. ” ஆப்ரேசன் கங்கா ” என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் எல்லைகளில் தஞ்சம் புகுந்துள்ள மாணவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது. இதுவரை பல கட்டங்களாக மாணவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர். மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் நாட்டிலிருந்து தலைநகரான டெல்லிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்து பேசியது. மேலும் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் தங்களது படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போர் காரணமாக சிக்கியிருந்த தமிழக மாணவர்களின் கடைசி குழு தமிழகம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

இதுவரை ஆயிரத்து 860 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிய நிலையில் விமானம் மூலம் இன்று கடைசி குழு மாணவர்கள் தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மாணவர்களை நன்கு ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட பலர் இருந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கேயே தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.