என்ன சோனமுத்தா போச்சா…`சிங்கம்’ சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த காவலர்… உடனே கத்தரிக்க உத்தரவிட்ட நீதிபதி..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா.

இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருக்கிறார். மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்திருக்கிறார்.

அப்போது, ராஜேஷ் கண்ணாவின் பெரிய மீசையைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதி முருகன், மீசையை உடனடியாக கத்திரித்துவிட்டு வந்து தன்னிடம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு பயந்த காவலர் ராஜேஷ் கண்ணா, நீதிமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறி அருகில் உள்ள ஒரு சிகை திருத்தகத்தில் தனது மீசையை கத்தரித்து அதன் அளவைக் குறைத்திருக்கிறார். பின்னர் மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று நீதிபதியிடம் காண்பித்திருக்கிறார். பலர் கூடியிருந்த நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையில் நீதிபதி தன்னிடம் நடந்துக் கொண்ட விதம் குறித்து நீலகிரி காவல்துறையின் உயர் அதிகாரிகளாடம் முறையிட்டிருக்கிறார் காவலர் ராஜேஷ் கண்ணா.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், “காவலர்கள் தாடி வளர்க்க பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், எவ்வளவு பெரிய மீசை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மீசை வளர்க்கும் காவலர்களுக்கு படி (அலவன்ஸ்) வழங்கப்படுகிறது. இந்த இளம் காவலர் சிங்கம் திரைப்படம் சூர்யா ஸ்டைலில் மீசை வைத்திருந்தார். நீதிபதிக்கு பிடிக்கவில்லை என கத்தரிக்கச் செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.