குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் அருகே ஒரு கொள்கலனிலிருந்து ரூ.376.5 கோடி மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் குஜராத் தீவிரவாத செயல்கள் தடுப்பு படையினரால் (ஏடிஎஸ்) கைப்பற்றப்பட்டிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடத்தப்பட்ட ஹெராயின் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட இருந்ததாக குஜராத் காவல்துறை தலைமை இயக்குநர் ஆஷிஷ் பாட்டியா தெரிவித்திருக்கிறார்.
துணி சுருள்களுக்குள் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த 540 துணி சுருள்களில், 64-இல் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் டேப் கொண்டு சுற்றப்பட்டதால் எக்ஸ்-ரே சோதனையில் இந்த ஹெராயின் சிக்கவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் கன்டெய்னர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கிரீன் ஃபாரஸ்ட் ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட கொள்கலன்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோவியல் கண்டைனர் லைன்ஸ் என்ற ஏஜெண்டால் பெறப்பட்டன. முந்த்ரா துறைமுக அதிகாரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பேசிய குஜராத் காவல்துறை தலைமை இயக்குநர் ஆஷிஷ் பாட்டியா, “போதைப்பொருள் வியாபாரிகள் இந்தியாவுக்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு அவர்களுக்கு கிடைக்கும் எந்த வழியையும் பயன்படுத்துவார்கள்.
முந்த்ரா மட்டுமின்றி குஜராத்தின் காண்ட்லா மற்றும் பிபாவாவ் போன்ற பிற துறைமுகங்களிலிருந்தும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள நவா ஷேவா துறைமுகத்திலிருந்தும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சென்னை மற்றும் மேற்கு வங்கத்திலும் கைப்பற்றப்பட்டது” என்று கூறினார்.
ஏ.டி.எஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் மத்திய அமைப்புகள் சமீபகாலமாக குஜராத் துறைமுகங்களுக்கு பிற நாடுகளிலிருந்துவரும் கப்பல் கன்டெய்னர்களிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை கைப்பற்றி உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 3,000 கிலோ, ஏப்ரல் மாதம் பிடிபட்ட 205.6 கிலோ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
Leave a Reply