தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது – பெங்களூருவில் முழு அடைப்பு..!

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகமும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இது வெறும் தண்ணீர் பிரச்சனை இல்லை. அரசியல் பிரச்சனை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்த்தும் மாநில அளவில் கர்நாடக காங்கிரஸுடன் மோதல் போக்கையும் கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு கர்நாடக மறுப்பு தெரிவித்தது. போதிய நீர் இல்லை என்பதை காரணமாக சொன்னது. ஆனால் தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவிரி மேலாண்மை ஆணையம் சொன்ன தண்ணீரை திறக்கும்படி உத்தரவு வெளியானது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதனால் அங்கு எந்த அசம்பாவிதங்களுக்கும் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நேற்றைய தினம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு ஒரு மாநிலத்தில் நடப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது அரசியல் நெறி. அதனை ஏற்பதும் ஏற்காததும் கர்நாடகாவின் விருப்பம். கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை சமாளிக்க வேண்டியது கர்நாடகா அரசாங்கம் தான். காவிரி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்” என தெரிவித்தார்.