யாராவது லிங்க் அனுப்பினால் உஷார் – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், “Cyber Security Challenges in Modern Era” என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, “இந்த நவீன காலத்தில் சைபர் கிரைம் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும். ஒவ்வொரு முறை தொழில்நுட்பம் வளரும்போது, சைபர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் கடினம் ஆகிறது. சைபர் கொள்ளையர்கள் நமது கொல்லைப்புரத்தில் இருந்து கொண்டே, வெளிநாட்டில் இருப்பதுபோல பேசி நம்மிடம் கொள்ளையடித்து விடுகிறார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் சுமார் 62,000 சைபர் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை. ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் போன்ற இடங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் நடந்து வருகிறது.

முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துதான் திருடினார்கள். ஆனால், இப்போது போன் மூலமாகவே கொள்ளையடிக்கிறார்கள். தற்போது போன் ஆப்கள் மூலம் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து வருகின்றனர். உங்களுக்கு யாராவது லிங்க் அனுப்பி, அதை க்ளிக் செய்ய சொன்னாலே அது ஆபத்துதான். இந்த மாதிரியான ஆபத்துகளில் இருந்து தப்பிக்க போதிய விழிப்புணர்வு வேண்டும்” என்று பேசினார்.