துருக்கி, சிரியாவுக்கு புறப்பட்டது இந்தியாவின் ஆப்ரேஷன் தோஸ்த்..!

ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன.

மீண்டும் 2-வது நாளாக நேற்றும் அடுத்தெடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பி வருகின்றன. இந்தியா தரப்பிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றே துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ‘ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மருத்துவமனை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனுடன் மீட்பு படையினரும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான அப்டேட்டுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.