சரியாக கேட்கல… வாக்கி டாக்கி பழுது ஓவர்… ஓவர்…

கோவையில் போலீசாரின் வாக்கி டாக்கி பழுதால் தகவல்களை பரிமாற்றுவதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கோவையில் மாநகர் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் மற்றும் 54 இன்ஸ்பெக்டர்கள், 115 எஸ்ஐ.,க்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போன்ற பல்வேறு தனிப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களை தவிர 20 சட்டம் – ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 4 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கு துறை போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல மாவட்ட போலீசார் எஸ்பி.,யின் கீழ் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, பேரூர், கருமத்தம்பட்டி, ஆகிய, 6 சப்–டிவிசன் டி.எஸ்.பி.,களும், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, 37 போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளது. மாநகர் மற்றும் மாவட்டத்தில் ஒவ்வோறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஒரு இன்ஸ்பெக்டர், 2 முதல் 3 எஸ்.ஐ.,க்கள், 5 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 20க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, போலீசாரின் எண்ணிக்கையை பொறுத்து 5 வாக்கி டாக்கி வரை வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார், தனிப்பிரிவு போலீசாருக்கும் வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்கி டாக்கி சரியாக வேலை செய்யாமலும், சிக்னல் கிடைக்காமலும், பழுதடைந்தும் உள்ளது. மேலும், பெரும்பாலான வாக்கி டாக்கியை ஒட்டு போட்டு போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். சிக்னல் கிடைக்காததால் தகவல்களை சரியாக பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

போலீசாருக்கு மிகவும் முக்கியமான தொழில்நுட்ப நண்பனாக இருப்பது வாக்கி டாக்கி தான். மாநகரில் 350க்கும், மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாக்கி டாக்கிகள் சில வருடங்களாக சரியாக வேலை செய்வது இல்லை. வாக்கி டாக்கி கொடுத்து பல வருடங்கள் ஆவதால் அதிகமான வாக்கி டாக்கிகள் உடைந்து ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. சரியாக சிக்னல்களும் கிடைப்பது இல்லை. வாக்கி டாக்கியில் பேசும் போது எதிரில் உள்ள போலீசாருக்கு சரியாக கேட்பது இல்லை. இதனால் தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து அவர்களை வாக்கி டாக்கியில் பேச கூற வேண்டி உள்ளது. மலை பகுதிகளில் மொபைல் போனும் எடுப்பது இல்லை. அங்குள்ள போலீசாரிடம் வாக்கி டாக்கியில் தகவல்களை பரிமாறுவது மிகவும் சிரமம். அதேபோல வாக்கி டாக்கி பேட்டரியும் சார்ஜ் நிற்பதில்லை. வாக்கி டாக்கி என்பது போலீசாரின் மிக முக்கியமான ஒன்று. இதனை வெளியே பழுது பார்க்க கொடுக்க முடியாது, எங்களது டெக்னிக்கல் அலுவலகத்தில் தான் கொடுத்து சரிசெய்ய முடியும். ஒரு வாக்கி டாக்கி பழுது பார்க்க கொடுக்கும் போது அதற்கு மாற்று கிடைப்பதில் கிக்கல் உள்ளது. இதனால் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறோம். மருதமலை, தடாகம், கணுவாய், மதுக்கரை போன்ற சில இடங்களில் வாக்கி டாக்கி சிக்னல்கள் கிடைப்பது இல்லை. மொபைல் போன் சிக்னலும் கிடைக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளில் தான் மிகவும் சிரமத்திற்குள்ளாவோம். வாக்கி டாக்கி பிரச்னை இங்கு மட்டும் அல்ல பல்வேறு இடங்களும் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.