விமான நிலையங்களை சுற்றி குப்பை கொட்டுவது, விமானங்களை அச்சுறுத்தும் வகையில் ‘லேசர்’ ஒளி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விமான நிலைய சுற்றுப்புறங்களில் ஏற்படும் இடையூறுகளை தடுக்கவும், புதிய சட்ட விதிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய ‘பாரதிய வாயுயான் விதிகள் 2026’கீழ், விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
1937-ம் ஆண்டு விதிகளுக்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்ட 220 அம்சங்கள் கொண்ட இந்தப் புதிய விதிகள், வரும் ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தில், விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதிய விதிகளின்படி, நாட்டில் உள்ள அனைத்து விமான விமான நிலையங்களைச் சுற்றி 18 கி.மீ. சுற்றளவுக்குள் விமானங்களை அச்சுறுத்தும் வகையில் லேசர் ஒளிக்கதிர்களை வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் அல்லது புறப்படும் விமானங்களின் காக்பிட் பகுதியை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்படும்போது, அது விமானிகளின் கண்களில் தற்காலிகப் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தி மிகப்பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. விமான நிலையங்களைச் சுற்றி 9 கி.மீ. தொலைவுக்குள் விமானிகளுக்குக் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை அமைக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்ணப் பறவைகள் அதிகளவில் கூடுவதால், அவை விமானங்கள் மீது மோதும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விமானங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் பறவைகள் மோதும் விபத்துகளைத் தடுக்க, விமான நிலைய சுற்றுச்சுவரிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவது, பறவைகளை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 10 நிலைகளில் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க புதிய சட்ட விதிகள் வழிவகை செய்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, உடனடியாக உச்சபட்ச அபராதம் விதிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் டி.ஜி.சி.ஏ. என்ற விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் இனி கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். விமான பயணிகளின் பாதுகாப்பு முதன்மையானது. சமீப காலமாக விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளி அடிப்பது, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தவே இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









