காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது சரமாரி தாக்குதல்- இளைஞர் மீது வழக்கு பதிவு..!

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் வெங்கடலட்சுமி (19). இவர் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் வெங்கடலட்சுமி, பாலமுருகன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் பலமுறை வெங்கடலட்சுமியை தொடர்பு கொள்ள முயன்று அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வெளியே வந்த வெங்கடலட்சுமியை, பாலமுருகன் வழிமறித்து உள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்யுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பாலமுருகன் வெங்கடலட்சுமியை சரமாரியாக தாக்க துவங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். பின்னர் இதுகுறித்து வெங்கடலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.