கோவை லாட்ஜில் மனைவியை தாக்கி அடைத்து வைத்த கணவர் கைது-ஓடும் ரெயிலில் பச்சிளம் குழந்தை கொலையா..?போலீசார் விசாரணை.!!

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். மிகுந்த பதற்றத்துடன் பேசிய அந்த பெண் தன்னை கணவர் அடித்து தாக்கி கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பூட்டி வைத்துள்ளதாகவும், தன்னை அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் . இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கோவை ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் அந்த விடுதிக்கு சென்று, மாற்று சாவி மூலம் கதவை திறந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணைநடத்தினார்கள். அப்போது அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கவிதா( வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நானும் கடையநல்லூர், கம்பநேரி புதுக்குடியை சேர்ந்த மாரிசெல்வம் என்கிற செல்வம்( வயது 26) என்பவரும் 22 – 08 – 2021 அன்று காதல் திருமணம் செய்து கொண்டோம் ,எங்கள் காதலுக்கு செல்வம் வீட்டில் எதிர்ப்பு இருந்தது, இதன் காரணமாக எனது கணவருக்கும். அவரது பெற்றோருக்கும்,அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். எனது கணவர் கோவையில்தான் கல்லூரி படிப்பு படித்தார் .இதனால் அவருக்கு கோவையை பற்றி நன்றாக தெரியும் ,மேலும் எனது கணவர் அவரது பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாகபிரசவத்தை கோவையில் உள்ள அரசு மருத்துவனையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கடந்த மாத இறுதியில் கடையநல்லூரில் இருந்து புறப்படும் ரயில் மூலம் கோவை வந்தோம் .பின்னர் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3-ந்தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சில நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் கடையநல்லூருக்கு புறப்பட்டுச் சென்றோம். இதனிடையே எனது கணவர் செல்வம் இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி என் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் எனது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதையடுத்து நாங்கள் இருவரும் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் மூலம் கோவைக்கு புறப்பட்டு வந்தோம். ரயில் மதுரை- திண்டுக்கல் இடையே வந்தபோது எங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த செல்வம் என் கையிலிருந்த குழந்தையை பிடிங்கி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசி கொலை செய்துவிட்டார். இரவு நேரம் என்பதால் எந்த இடம் என்று தெரியவில்லை. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதையடுத்து கோவை போலீசார் மதுரை, திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.விசாரணையில் கவிதாவை தாக்கியபோது மயக்கமடைந்து கிழேவிழுந்தார். அவர் இறந்து விட்டதாகக் கருதி அறையை பூட்டிவிட்டு தப்பியதாக தெரிவித்தார், செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.குழந்தை கொலையா? என்பது குறித்து இவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.