கோவையில் சாலை விதிமுறைகளை மீறியதாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவு- ரூ.7.22 கோடி அபராதம் வசூல்..!

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் சென்றதாக 7,736 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 15,634 வழக்குகள், சிக்னல் மீறியதாக 56,065 வழக்குகள், ஹெல்மேட் போடாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 4,87,338 வழக்குகள், சீட்பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 35,170 வழக்குகள், அதிக உயரத்திற்கு லோடு ஏற்றி சென்றதாக 7,676 வழக்குகள் என மாநகரில் மொத்தமாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவானது.

இதன் மூலமாக ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்பாட் பைன் என்ற வகையில் ரூ.6.10 கோடி வசூலிக்கப்பட்டது.கடந்த 2021-ம் ஆண்டில் 866 விபத்துகள் நடந்தது. இதில் 234 பேர் இறந்தனர், 691பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் 1,083 விபத்துகளில், 267 பேர் இறந்துவிட்டனர். 939 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைவாக வழக்குப்பதிவு செய்தும் அபராதம் அதிகமாக பெறப்பட்டுள்ளது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பழுதாகியிருக்கிறது.

மேம்பால பணிகள் அதிகளவு நடக்கிறது. வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதியில் நெரிசலில் காத்திருக்கும் வாகனங்கள் வேகமாக செல்ல முயற்சி செய்யும்போது விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் விபத்துகள் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது. காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் சென்று வருவது அதிகமாக இருக்கிறது. அவினாசி ரோட்டில் இதர ரோடுகளை காட்டிலும் இரு மடங்கு வாகனங்கள் செல்கிறது. ஒரே ரோட்டில் அதிக வாகனங்கள் செல்வதால் பல கி.மீ தூரத்திற்கு நெரிசல் நீடிக்கிறது. மேம்பால பணி முடிந்தால் மட்டுமே இந்த ரோட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.