முடிஞ்சா அத செஞ்சு பாருங்க… எடப்பாடிக்கு உதயநிதி சவால்.!!

மதுரையில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து, சட்டமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய தினம் ஓபுளா படித்துறை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் கடந்த எட்டு நாள்களாகப் பிரசாரம் செய்துவருகிறேன், தி.மு.க-வுக்கு சட்டமன்றத் தேர்தலை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் ஆதரவு தருவார்கள்.

மதுரையில் நீங்கள் அளித்த வரவேற்பே வெற்றியை உறுதியாக்கியுள்ளது, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை மாமன்றத்துக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

சட்டமன்றத் தேர்தலில் தெற்குத் தொகுதியில் பூமிநாதன் அவர்களை வெற்றிபெற வைத்தமைக்கு நன்றி. குறிப்பாக தாய்மார்களுக்கு நன்றி. ஆண்களைவிட பெண்கள்தான் தி.மு.க-வுக்கு அதிக அளவில் ஆதரவு தருகிறார்கள்.

தாய்மார்கள் முடிவெடுத்தால் மாற மாட்டார்கள். எனவே, தி.மு.க-வின் வெற்றி உறுதி. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும்.

கொரோனா பரவல் காலகட்டத்தின்போது ஆட்சிக்குவந்த நிலையிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும், கொரோனா வார்டு உள்ளே சென்று ஆய்வு செய்தவர் மு.க.ஸ்டாலின். சொல்வதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடனாக்கிச் சென்ற எடப்பாடி அரசு நிதிநிலையில் தமிழகத்தைத் தவிக்கவிட்டுச் சென்ற நிலையிலும், கொரோனா நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய் வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின். மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் அறிவித்து செயல்படுத்தினார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இல்லம் தேடி மருத்துவம் மற்றும் கல்வி திட்டங்களைக் கொண்டு சேர்த்தோம். நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில் அது படிப்படியாக வழங்கப்படும். இதுபோல் பல்வேறு வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்றத்தை முடக்கப்போகிறாராம்… வயதில் இளையவராக இருந்தாலும் நான் சவால்விடுகிறேன்! முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள். அப்படியே முடக்கி, மீண்டும் தேர்தல் நடத்தினாலும் 200 இடங்களைப் பிடிப்போம்.

தமிழகத்தில் தி.மு.க இருக்கும்வரை பா.ஜ.க கால்வைக்க முடியாது என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடியிடம் சவால்விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நான்கு நாள்களாக என்னைத் தேடிகொண்டிருக்கிறார், என்மீது அவ்வளவு பாசம், என் வீட்டில்கூட அப்படித் தேட மாட்டார்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு நான் காணாமல் போய்விட்டேனாம். சட்டசபையில் அவருக்கு எதிரில்தான் நான் இருக்கிறேன்.

அவர் டேபிளுக்கு மேல் தேட வேண்டும். கீழே தேடினால் எங்களை எப்படித் தெரியும்? சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்று பதவி பெற்றதால் எடப்பாடி அப்படி நடந்து பேசுகிறார். ஆனால், தி.மு.க ஆட்சி மக்களின் அன்பால், ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. மதுரைக்கு120 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் வரவிருக்கிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்கள் அவரிடம் எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு உதயநிதி, “மதுரை எய்ம்ஸை இன்னும் நீங்கள் மறக்கவில்லையா? செங்கலை எடுத்து வர மறந்துட்டேன். கடந்த முறை மோடி வந்தபோது அவரிடம் கொடுத்துவிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே பேசியபடி அங்கிருந்து நகர்ந்தார்.