வேங்கைவயல் விவகாரம்: மே.6ல் விசாரணையை தொடங்குகிறது ஒரு நபர் ஆணையம்..

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதியின் ஒரு நபர் குழு மே-6ம் தேதி விசாரணையை தொடங்க உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் இந்த மேல்நிலை நீர் தேக்கத்தோட்டியில் மர்மநபர்கள் மனிதக்கழிவை கலந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26ம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

2 பேரிடம் குரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பகுப்பாய்வு, அடையாளம் காணப்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், அடுத்த வாரம் வேங்கைவயல் விவகாரம் குறித்த விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் 6-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் புதுக்கோட்டை செல்ல இருக்கிறார். இதனிடையே விசாரணைக்காக ஆணையத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது..