விவசாயிகளை அநாகரீமாக பேசிய வேளாண் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோவை கலெக்டரிடம் வலியுறுத்தல்.!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சமரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பின்னர் வேளாண் விற்பனைத்துறை இணை இயக்குனர் எங்களிடம் வந்து என்னை கூறி வைத்து நிறைய கேள்வி கேட்கப்படுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டார். மேலும் விவசாயிகளை அநாகரிகமாக பேசினார். விவசாயிகளை அநாகரிகமாக பேசிய வேளாண்துறை அதிகாரி மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் உள்ள ஒத்தக்கால் கிராமத்தில் பொள்ளாச்சி மெயின் ரோடு அருகே பொது மின்மயானம் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் எந்தவிதமான கருத்துகளும் கேட்காமல், ஆலோசனை செய்யாமல், பெரும்பான்மையான பொதுமக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பொதுமின்மயானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மின்மயானம் அமைய உள்ள இடம் அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்துக்கு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் பஸ்கள் வராமல் மேம்பாலத்துக்கு மேல் சென்று விடும். இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் பொழுது வருகின்ற சாம்பல் கழிவு மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றால் பெரிதும் பாதிப்பு அடைவோம். எனவே கலெக்டர் மின் மயானம் அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.