நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 1 லட்சம் போலீசார் குவிப்பு.!!

சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1.13 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர்.

சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று மாலை முதல் அதிகாலை வரை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பணப்பட்டுவாடாவை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 1 மணி வரை நடந்த அதிரடி வேட்டையில் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்த நபர்களை பறக்கும்படையினர் பிடித்து பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை விடியவிடிய நடைபெற்றது. கோவையில் 10 அட்டை பெட்டிகளில் இருந்த 960 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். எனவே வாக்காளர்கள் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவின்போது ஆள்மாறாட்டங்களை தவிர்க்க இந்த 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.