உக்ரைன்-ரஷ்யா போர்: புதினுடன் கூட்டு சேர்ந்த கிம் ஜாங் அன்.. ஒரு லட்சம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா திட்டம்..!

பியாங்க்யாங்: உக்ரைன் ரஷியா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷிய அதிபர் புதினுடன் கைகோர்த்து உக்ரைனை வீழ்த்த திட்டமிட்டுள்ளார்.

உக்ரைன் நாடு நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஏறத்தாழ 6 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவு பலிக்கவில்லை.

இதனால் பல மாதங்களாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றினாலும் ரஷ்யாவால் உக்ரைனை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஒருபக்கம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறலுக்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யா மீது அடுக்கடுக்கான பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக உலக அளவில் முக்கிய உணவுப்பொருட்களான கோதுமை, சோளம், பார்லி, சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் முன்னனியில் இருந்து வந்த ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, இந்த இரண்டு நாடுகளிலிருந்து மேற்கண்ட உணவு பொருள்களின் இறக்குமதியை நம்பியுள்ள மற்ற நாடுகளும் உணவு தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. எப்போ தான் போர் முடியும் என இருநாட்டு மக்களும் காத்திருந்து வருகின்றனர்.

உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷ்ய படைகள், அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தவிடு பொடியாக்கி வருகிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என ஏராளமான இடங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளன.

இதன் மூலம் ஆலையின் உலர் சேமிப்பு வசதியின் தளம் சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு உலை மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ரஷ்யா இதை மறுத்தது. தொடர்ந்து நீடித்து வரும் போரால், ரஷ்யாவும் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. ராணுவ ரீதியாகவும் கடும் இழப்பை ரஷ்யா சந்தித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா ஆர்வம் காட்டுவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றிபெறுவதற்காக சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்களை தன்னார்வலர்களாக அனுப்ப வடகொரியா முன்வந்து இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கைமாறாக எரிசக்தி மற்றும் தானியங்களை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.