பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர்.
அதில், ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீசார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே, இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் இவ்வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது. அது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என திமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தவெக தலைமையிலான தமிழக அரசு வாபஸ் பெற்றது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 5 பேர் சேர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று (18-09-26) நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் 40 நாள் கடந்துவிட்டத்ய். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் ஏற்கெனவே ஜாமீன் பெற்று விடுதலையாகிவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழகு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை, எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில், ‘கொலை வழக்கின் விசாரணையில் மனுதாரர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதை காரணமாகக் கூறி ஜாமீன் கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘சட்டப்படி 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை’ எனக் கூறி மனுதாக்கல் செய்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் மறு உத்தரவு பிறக்கும் வரைக்கும் தினந்தோறும் 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.








