அவிநாசி சாலையில் மேலும் இரு மேம்பாலங்கள்:தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தொழில்நுட்ப குழு ஆய்வு.!!

சூலுார் : அரசூர் அருகே, அவிநாசி ரோட்டில் மேலும் இரு இடங்களில் மேம்பாலம் கட்டுவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.

சாலைப் போக்கு வரத்து உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்:544) ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டது. கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.ஊத்துப்பாளையம் பிரிவு, சங்கோதிபாளையம் பிரிவு, முதலிபாளையம் பிரிவு, அரசூர் பிரிவு ஆகிய இடங்களில் பாலங்கள் கட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கோழிப்பண்ணை மற்றும் ஊத்துப்பாளையம் பிரிவு ஆகிய இரு இடங்களிலும் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டு, நிறைவடையும் தருவாயில் உள்ளன.புதிய பாலங்கள் இந்நிலையில், முதலிபாளையம் பிரிவு, செங்கோடகவுண்டன்புதுார் பிரிவு ஆகிய இடங்களில் உள்ள மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அவிநாசி ரோட்டை கடக்க முடியாமல், ஒரு கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இந்த இடங்களில் ரோட்டை கடக்க முயல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து, தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவின் தலைவர் பொன்னையா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், செங்கோடகவுண்டன் புதுார் பிரிவு, முதலிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டுவது குறித்து முதல் கட்ட ஆய்வில் ஈடுபட்டனர்.ஆய்வில், அப்பகுதியில் கடந்து செல்லும் வாகனங்கள், இருபுறங்களில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள தொழிற்சாலைகள், பள்ளிகள் குறித்து, கவனத்தில் கொள்ளப்பட்டது.