தமிழக அரசியல் ‘ரொம்ப காஸ்ட்லி’:எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது-அண்ணாமலை ஆவேசம்.!!

கோவை: ”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசியல் ரொம்ப ‘காஸ்ட்லி’யாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் உள்ளாட்சி தேர்தல் இறுதி நாள் பிரசாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தேர்தலில் தி.மு.க., 2,000 ரூபாய் பணம், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு ‘ஹாட்பாக்ஸ்’ ஆகியவற்றை கொடுத்து உள்ளாட்சியை பிடித்து விடலாம் என, நினைத்து செயல்படுகிறது.கம்பியில் வெள்ளி முலாம் பூசி கொலுசு என கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசியல் ரொம்ப ‘காஸ்ட்லி’யாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது. பணம் கொடுத்தால்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற மனநிலையை உருவாக்கிவிட்டனர். இந்த பண கலாசாரத்துக்கு இந்த தேர்தலில், மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, புகார்மனு கொடுத்து இருக்கிறோம். கோவையில் பா.ஜ., சார்பில் போலீசில் எட்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு புகாரை கூட வழக்காக போலீசார் பதிவு செய்யவில்லை.கோவையில் தேர்தல் அதிகாரிகளை நான்கு முறை மாற்றி உள்ளனர். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.