ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்… ஊஞ்சல் ஆடும் இபிஎஸ் பதவி… எடப்பாடிக்கு எதிராக மட்டும் தீர்ப்பு வந்தால் என்னவெல்லாம் நடக்கும்..?

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் 3 விதமான மாற்றங்கள் கட்சியில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

2 வாரங்களில் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இதில் முன்பே கூறி இருந்தது.

இதன் காரணமாக அடுத்த வாரத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் வரும் தீர்ப்பே பொறுத்தே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரிய வரும். அவரின் பதவி தற்போது நீதிமன்ற தீர்ப்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் எடப்பாடி வைத்த வாதத்தில் ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிறது.

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். எனவே பொதுக்குழுவை நாங்கள் கூட்டியதில் தவறு இல்லை என்று எடப்பாடி கூறினார். வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. அதோடு அவைத் தலைவரை நிரந்தரமாக தேர்வு செய்ததை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். அதனால் இவர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது, என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் மட்டும் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் பின்வரும் 3 சம்பவங்கள் அதிமுகவில் நடக்கும்.

தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால்.. மீண்டும் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஆவார். அவர் அதே பதவியில் தொடர்வார். பொதுக்குழு நடந்தது இல்லை என்று ஆகிவிடும். பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியதும் இல்லை என்று ஆகிவிடும். அதோடு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்கியதும் செல்லாது என்று ஆகிவிடும். ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இது அமையும்.

இது போக ஓ பன்னீர்செல்வமின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி நீடிக்கும். ஏனென்றால் கோர்ட் தீர்ப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் ஆனது, உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆனது எல்லாம் செல்லாது என்று ஆகிவிடும். எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக எடுத்த முடிவுகள் எல்லாமே செல்லாது என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.

தீர்ப்பு மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில்.. அவரின் அனுமதி இன்றி பொதுக்குழு நடத்த ஏற்படும். இதனால் மீண்டும் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கும் ஓ பன்னீர்செல்வம் அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்படும். தீர்ப்பு மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.