தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் ஒவ்வொரு கட்சியினரும், தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு வராததை தொடர்ந்து அவரும் தனித்து போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் வேட்பாளரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக மட்டும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், மதிமுக 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய மக்கள் கட்சி 2, மனிநேய ஜனநாயக கட்சி 1, முக்குலத்தோர் புலிப்படை 1, எஸ்டிபிஐ 1, தமிழர் தேசம் கட்சி 1 என 12 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. மேலும் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 5, இந்தியன் யூனியன் முஸ்லீக் 2 என 58 தொகுதிகளில் தனித் தனிச் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி 2, புரட்சி பாரதம் கட்சி 1, புதிய நீதி கட்சி 1, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 என 172 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடுகிறது.தொடர்ந்து பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 26 பாஜக உறுப்பினர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உள் ஒதுக்கீடாக 1 தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 5 தொகுதிகளிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 என 6 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனால் மொத்தம் 33 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) 18 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளில் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. ஏற்கெனவே நான்கு முனையில் கட்சிகள் இருக்கும் நிலையில், சசிகலா – ராமதாஸ் கூட்டணியும் களத்தில் மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
சசிகலாவின் அஇபுதமமுக 71 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்ற அமைப்புகள் 11 தொகுதிகளில் சசிகலா உடன் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் 82 தொகுதிகளில் தென்னந்தோப்பு சின்னத்தில் சசிகலாவின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராமதாஸ் தரப்பு பாமக 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது, சிலிண்டர் சின்னத்தில் இவர்களின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி 170 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 118 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்த முறை வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் கடுமையாக பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றுபட்ட பாமகவின் வாக்கு வங்கி யார் பக்கம் அதிகம் சாயும் என்பதை பொறுத்தே, பாமக யார் பக்கம் போகும்? என்பதும் உறுதியாகும். தேர்தலுக்கு பின் ராமதாஸ் – அன்புமணி ஒன்றுபடுவார்களா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் நீடிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்டார் வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். சௌமியாவுக்கும், அன்புமணி பாமகவின் வேட்பாளர்களுக்கும் அன்புமணியின் மகள்களான சங்கமித்ரா, சஞ்சுத்ரா இருவரும் தொடர்ச்சியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வி.செல்வத்தை ஆதரித்து ஏரியூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது தங்களையும், தாத்தா ராமதாஸையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், பொங்கல் விழா எப்போதும் கூட்டுக் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்தோம் என்றும் ஆனால் தற்போது ஒரு வருடமாக பிரிந்து இருக்கிறோம் என்றும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். தற்போது சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா ஆகியோர் பரப்புரை மேற்கொள்ளும் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதில் அன்புமணியின் மகள் சங்கமித்ரா, “தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது. முதல் குழந்தை பிறக்கையில், பிரசவ வலி வந்தபோதே மருத்துவமனைக்கு வந்து பார்த்தார். என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை” என கடுமையாக குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து, அவர்கள், “நாங்கள் தருமபுரியின் எங்கள் அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தான் வந்தோம். ஆனால் பென்னாகரத்தில், நமக்கு துரோகம் செய்தவர்கள் போட்டியிடுகிறார்கள். தருமபுரி வெற்றியை விட, பென்னாகரம் வெற்றி தான் நமக்கு ரொம்ப முக்கியம்” என கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தனர். அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. அன்புமணி – சௌமியா இணையருக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள் ஆவர்.






