உக்ரைன் சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா சர்வதேச அணுசக்தி கழகம் எச்சரிக்கை..!!

ஜெனிவா: உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அணுசக்தி கழகமும் எச்சரித்துள்ளன.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குதல்களை தொடங்கிய ரஷ்யா, பல்வேறு மாகாணங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள், சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சபோரிஸ்ஷியா மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின.

இதில் அணுமின் நிலைய கட்டுமானம் பாதிக்கப்பட்டதால் அணு உலைகளில் ஒன்று மூடப்பட்டது. ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு ஏற்படுவதன் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தன. இந்நிலையில் அணுமின் நிலையம் மீதான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என சர்வதேச அணுசக்தி கழகம் எச்சரித்துள்ளது. அணுமின் நிலையம் மீதான சிறிய தாக்குதல்கள் கூட பேரழிவை ஏற்படுத்தும் என்பதை இரண்டு நாடுகளும் உணர வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி கழக தலைவர் ரஃபேல் க்ரோசி தெரிவித்திருக்கிறார்.

சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபை தலைவர் ஆண்டனியோ குட்டரஸ், அப்பகுதியில் இருந்து படைகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடையே சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது தங்களது படைகள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக உக்ரைன் படையினரே அணுமின் நிலையம் மீது குண்டு வீசியதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.