பீகாரில் ரயில் விபத்து – 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..

பாட்னா: பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்து உள்ள நிலையில், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு அறிமுகம் செய்த கவாச் தொழில்நுட்பம் என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் எழுந்து இருக்கிறது.

அசாம் மாநிலம் காமாக்யாவை நோக்கி டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், இரவு பீகார் வழியாக சென்று கொண்டு இருந்தது. பக்சாரை மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 9.35 மணியளவில் சென்றுகொண்டு இருந்த இந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

6 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்பட்ட நிலையில், 21 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக 15 ஆம்புலன்சுகள், 5 பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. முதலில் ஒரு பயணி உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை 80 க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இரவு நேரம் என்பதால் இருட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாமல் தடுமாறிய மீட்புக் குழுவினர் இன்று 2 வது நாளாக விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகல் ஏறி நடைபெற்று வருகின்றன. தண்டவாளத்திலேயே கிடக்கும் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக ரயில்வே துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசால் பல கோடி மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட கவாச் தொழில்நுட்பம் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலம் பாலசோரில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ரயில் மற்றொரு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாதில் 260 க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்தார்கள். 900 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அப்போதும் கவாச் தொழில்நுட்பம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விபத்து நடந்த பகுதியில் கவாச் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே துறை விளக்கமளித்தது. அதேபோல் பீகாரில் விபத்து நிகழ்ந்த ரயில் நிலையத்திலும் கவாச் இல்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய கவாச் தொழில்நுட்பம் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வரும் ரயில்கள் மோதிக்கொள்வதை தடுக்க உதவும். ரயில் ஓட்டுனர்கள் செயல்பட தவறும்பட்சத்தில் தானாகவே பிரேக் போடும் ஆற்றல் அதற்கு உள்ளது. இதன் மூலம் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்கும்.

அதேபோல் லெவல் கிராசிங்கில் விபத்துகளை தடுக்க தானியங்கியாக விசில் அடிப்பது, இயக்கத்தை கட்டுப்படுத்துவது, அவசர காலங்களில் ரயில்களை கட்டுப்படுத்த SOS வசதி போன்றவை இதில் உள்ளன. இதனை நிறுவ ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 லட்சம் செலவாகும். அதே நேரம் இது ரயில் தடம்புரள்வதை தடுக்குமா என்பது தொடர்பாக எந்த விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.