உரிமம் இன்றி பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை- தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை அழைத்து என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலாளர் பட்டாசு கடைகளில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவினை கூட்டி ஆய்வு நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

நமது மாவட்டத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு 9 நபர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குழுவின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகள், பட்டாசுக் கடைகள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவின் கீழ் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். தீபாவளி வருவதால் அதிகமாக பட்டாசுகளை விற்க வேண்டும் என்று பாதுகாப்பு வழிமுறைகளை மீறக்கூடாது என்று பட்டாசு கடைகள் உரிமையாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். சங்க பிரதிநிதிகள் தூத்துக்குடி மாவட்டத்தை எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத மாவட்டமாக்குவோம் என்று கூறியுள்ளார்கள்.

நமது மாவட்டத்தில் 15 கிலோவுக்கு கீழே உள்ள வெடி மருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்குவார்கள். 15 கிலோவுக்கு மேல் 500 கிலோவுக்குள் வெடி மருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையில் இருக்கின்ற பெசோ அமைப்பின் மண்டல அலுவலகம் உரிமம்வழங்கும். 500 கிலோவுக்கு மேலே வெடிமருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு நாக்பூரில் இருக்கும் பெசோவின் தலைமையகம் அனுமதி கொடுப்பார்கள்.

நமது மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் (எல்.இ.1) இருக்கின்றது. அதில் 15 கிலோவுக்கு கீழே உள்ள வெடி மருந்துகளை கையாளும் 9 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், 15 கிலோவில் இருந்து 500 கிலோ வரை வெடிமருந்துகளை கையாளும் 8 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையில் இருக்கின்ற பெசோ என்று சொல்லக்கூடிய அமைப்பின் மண்டல அலுவலகம் வழங்கியுள்ளது. இந்த 17 பட்டாசு தொழிற்சாலைகளிலும் பட்டாசு உற்பத்திகளை அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம்.

இதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்.இ.5 என்று சொல்லக்கூடிய 184 பட்டாசு விற்பனை கடைகள் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணித்திருக்கின்றோம். அதுபோல 164 தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கையாள்கிறார்களா என்பதை ஆய்வு செய்து உடனடியாக பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தி உள்ளோம். நமது மாவட்டத்தில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். மாவட்ட அளவில் அமைக்கப்படவுள்ள ஆய்வு குழுக்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு அலுவலர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.