காணாமல்போன மாடுகளை தேடிச்சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி – ராஜபாளையத்தில் நடந்த சோகம்..

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36).

இவர், அப்பகுதி மலையடிவாரப்பகுதியில் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்து செல்லுகையில் 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே தன்னுடைய நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்ட மாரியப்பன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோப்புகளில் காணாமல்போன மாடுகள் தஞ்சம் அடைந்துள்ளதா என பார்ப்பதற்கு தேடிச்சென்றிருக்கிறார். அப்போது, ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேசராஜா என்பவருக்குச் சொந்தமான தோப்புக்குள் சென்றபோது, திடீரென மின்சாரம் தாக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாரியப்பனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் உறவினர்கள், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து அதில் உயர் மின்சாரம் பாய்ச்ச செய்ததாலே மாரியப்பன் உயிரிழந்ததாக கூறி, அவரின் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வேலி அமைத்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், ‘உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’ என உறுதியளித்ததை தொடர்ந்து மாரியப்பனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து மாரியப்பனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.