உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தகவல்.!!

உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 20வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக தெரிவித்தார். உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷ்யா தவறான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாகவும், இதை காரணம் காட்டி ரஷ்யா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், நேட்டோ நாடுகள் மிகவும் விழிப்புடன் இருப்பதாக கூறிய அவர், சர்வதேச சட்டத்தை மீறினால் ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து ஐரோப்பிய தலைவர்களுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த, அதிபர் பைடன் அடுத்த வாரம் ஐரோப்பா செல்லவுள்ளதாகக் கூறினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை நிவர்த்தி செய்யவும், நேட்டோ நட்பு நாடுகளுக்கான பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அதிபர் பைடன் முயல்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து ரஷ்ய அதிகாரிகள் 15 பேர் மீது கனடா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உக்ரைன் மீதான சட்டவிரோத போருக்கு உடந்தையாக இருந்த அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ரஷ்ய அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை 500ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உக்ரைனுக்கு தொடர்ந்த ஆதரவு அளித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஷ்யாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யாவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.