கோடை விடுமுறையை ஒரு வாரம் நீட்டிக்க தயங்குவது ஏன்..?தமிழக அரசிடம் கேள்வி..?

தமிழகத்தில் கோடை வெய்யில் உச்சத்தில் இருப்பதால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோடையின் உக்கிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை குறைந்தபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திட்டமிட்டபடி 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஒருவேளை பள்ளிகள் திறப்பதில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். முதல்வரோ வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறார். ஒரு வாரம் காலம் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு இம்மாத இறுதியில்தான் சென்னைக்கு திரும்புகிறார்.

இந்நிலையில் மாற்றங்கள் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் இறுதியான முடிவுக்கு வரவில்லை என்றுதான் தெரிகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம், மிதமான மழை பெய்தால் கோடை வெய்யிலின் தீவிரத் தன்மை குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்து மூன்று நாட்களாக தொடர்ந்து கணித்து வருகிறது. ஆனால், இதுவரை மழை எங்கேயும் பெய்யவில்லை. கோடை வெப்பமும் குறைவதாக இல்லை.

ஒரு வாரத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்துவிடும். மேலும் பள்ளிகள் திறப்பை தள்ளிப் போடுவதற்கு வேறு ஏதும் நியாயமான காரணங்கள் இல்லையெனறு பள்ளி கல்வித்துறை நினைக்கிறது. எதுவாக இருந்தாலும், கடைசி நேரத்து குழப்பங்களை தவிர்க்க, அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது..