ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும். இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார். தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் தடையை மீறியும் வெளிமாநில வாகனங்களும் இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகமான வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் இந்த வழியாக வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையில் விபத்து அடிக்கடி நடந்து வந்தது. இதன் காரணமாக உள்ளூர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊட்டி நகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனிடையே இந்த சாலையில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தற்பொழுது இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விகுறியே. கல்லட்டி சாலையில் விபத்துகளை தடுக்க சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்தும் அந்த சாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்லட்டி சாலையில் தடையை மீறி செல்லும் சுற்றுலா வாகனங்கள்..!
