கோவையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை..!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதே சமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. ஒரே சமயத்தில் தக்காளிகள் விற்பனைக்காக குவிந்துள்ளதால் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாட்டுத்தக்காளி கிலோ ரூ.30-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.40-க்கும் விற்பனை ஆனது.ஆனால் இன்று காலை நேர்மாறாக நாட்டுத்தக்காளியும், ஆப்பிள் தக்காளியும் ஒரே மாதிரியாக கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் சிறிய நாட்டுத்தக்காளி கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. தக்காளி பழங்களை பறிக்கும் கூலி கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி பயிரிட்ட பல விவசாயிகள் பழங்களை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுள்ளனர். செடியில் தக்காளிகள் அழுகி காய்ந்து கிடப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்