எம்பிசி இட ஒதுக்கீடு கேட்டு பாமக-வினர் சட்டசபை முற்றுகை போராட்டம் – போலீசார் மீது தண்ணீர் பாட்டில், கல் வீச்சு தாக்குதல்..!

புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை டிரைவர் ,மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர், ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும் முன்பு இருந்த இட ஒதுக்கீட்டு அரசாணையை பின்பற்றவும் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தை வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை முன்னிட்டு புதுவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனம் ஆட்டோ டெம்போ வேன் பஸ் மூலம் பாமகவினர் அண்ணா சிலை அருகே கூடினார்கள் . அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர் . ஊர்வலத்திற்கு பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார் . ஊர்வலம் அண்ணா சாலை நேரு வீதி மிஷன் வீதி ஜென்ம ராக்கினி ஆலயம் வழியாக சட்டசபை நோக்கி வந்தது. போலீசார் ஆம்பூர் சாலை அருகே பேரிகார்டு அமைத்து ஊர்வலத்தை தடுக்க திட்டமிட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் பேரிக்காடை தள்ளி முன்னேற முயன்றனர் . இதற்கு இடையில் ஊர்வலத்தின் பின்புறத்தில் இருந்து போலீசாரை நோக்கி தண்ணீர் பாட்டில் கற்கள் வீசப்பட்டன. ஊர்வலத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய போலீஸ் இல்லை இதனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் போலீசாரை தள்ளிவிட்டு சட்டசபை நோக்கி பாமகவினர் முன்னேறினர். இதை அடுத்து சட்டசபை நுழைவு வாயில்கள் மூடப்பட்டன சட்டசபை அருகே பாமகவினர் கோஷம் எழுப்பியபடி அதிக அளவில் வந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சட்டமன்றம் நுழைவு வாயில் முன்பு திரண்ட பாமகவினரிடம் அங்கிருந்து ஆம்பூர் சாலைக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் பாமகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . பாமகவினரை தலைமை நிர்வாகிகள் சமாதானப்படுத்தி ஆம்பூர் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இட ஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.