இன்று ஓட்டு எண்ணிக்கை… அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

புதுடில்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர்.தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர். நாடு முழுதும், 68 இடங்களில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த ஓட்டுப் பெட்டிகள் புதுடில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன. அவை பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கப்பட்டு உள்ளன.இன்று காலை 10:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. அனைத்து ஓட்டுகளும் கலக்கப்பட்டு, பிறகு எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.காங்கிரசின், 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக தற்போது தேர்தல் நடந்துள்ளது. மேலும், 24 ஆண்டுக்குப் பின், சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.