சென்னை: சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசுக்கு அறிவுரை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பிறகு, மாணவர்களிடம் இணையதள விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பள்ளிக்கல்வித் துறை நடத்திய கணக்கெடுப்பு, மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்து பகிர்வோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு, இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஜூன் 27ம் தேதி சமர்ப்பித்தது.
அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு கடந்த செப்.26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.
சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அக்.17ம் தேதி தமிழக மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டன.
நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஆன்லைன் விளையாட்டு தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.