தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்ட முயற்சி- இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது..!!

சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 முன்னதாக போராட்டம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாளை (புதன்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சியின் அமைப்புரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, கட்சியின் அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்துள்ளனர்” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை (அக்.19) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 62 எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வள்ளுவர்கோட்டம் வந்தனர். போராட்டத்திற்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி பேருந்துகளில் ஏற்றினர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியானது.

ஜெயக்குமார் பேட்டி: பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை செய்கிறது. அதை கண்டித்து நாங்கள் போராட்டம் அறிவித்தோம். ஆனால், ஒரு ஜனநாயக முறையிலான போராட்டத்தைக் கூட இந்த அரசு ஒடுக்குகிறது. இந்த அரசுக்கு எங்களைப் பார்த்து அச்சம் இருக்கிறது. நாங்கள் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அமர அனுமதிக்க வேண்டும் என்று தான் கோருகிறோம். ஆனால் அப்படியொரு பதவியே இல்லை எனக் கூறுவது சரியல்ல. சட்டமன்றம் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது.எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்து ராஜரத்தினம் மைதானம் அழைத்துச் செல்கின்றனர்” என்றார்.