இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம்… வெறும் கண்களில் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல.!!

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும்.

அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.

சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரிய கிரகணம் என்பது அமாவாசை அன்று நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டுதான். இவற்றில் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் காண முடியாது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனின் பெரும்பாலான பகுதி மறைத்து நிலவின் விளிம்பில் சூரிய ஒளி வளையம் போன்று தோன்றும். அந்த சமயத்தில் பூமியின் சில பகுதிகளில் வளைய வடிவில் நிழல் தோன்றும். ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது பகுதி, முழு மற்றும் வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும். அந்த வகையில் இன்று தோன்றுவது முழு சூரிய கிரகணமாகும். முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் முழுமையாக மறைந்து வானம் இருண்டு காணப்படும்.

இந்திய நேரப்படி (IST), முழு சூரிய கிரகணம் இன்று இரவு 9:12 மணிக்குத் தொடங்கி, முழு சூரிய கிரகணம் இரவு 10:08 மணிக்குத் நிகழும். பின் நாளை அதிகாலை 2:22 மணிக்கு முடிவடையும். மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரையில் இந்த முழு சூரிய கிரகணம் முதலில் நிகழத் தொடங்கும். முழு நிகழ்வும் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்தாலும், நான்கு நிமிடங்கள் மட்டுமே சூரியன் முழுமையாக மறையும். நாசாவின் கூற்றுப்படி, சூரியன் முழுமையாக மறையும் நிகழ்வு 4 நிமிடங்கள் 27 வினாடிகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் மெக்சிகோ, இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும். இந்திய நேரப்படி இன்று இரவு இந்த சூரிய கிரகணம் தோன்றுவதால் இதனை காண இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகணத்தின்போது கோயில் நடை மூடப்படும். இதனை சூதக் காலம் என அழைப்பார்கள். இந்தியாவில் கிரகணம் தென்படாது என்பதால் சூதக் காலமும் கணக்கில் வராது.

சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்த்தால் அதிலிருந்து வெளியாகும் கதிர்கள் கண்களை பாதிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கலாம். சூரிய கிரகணத்தைக் காண, பிளாக்சி பாலிமர், அலுமினிஸ்டு மைலார் போன்ற கண் வடிகட்டிகள் அல்லது வெல்டிங் கிளாஸைப் பயன்படுத்தி காணலாம். இருப்பினும், கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களில் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.