இன்று தனியார் பள்ளிகள் கண்டிப்பாக நடக்கும்: மீறினால் கடும் நடவடிக்கை- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டம்..!

சென்னை: தமிழ்நாடு முழுக்க தனியார் பள்ளிகள் இன்று கண்டிப்பாக இயங்கும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார். மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன் மக்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

நேற்று கலவரத்தில் தனியார் பள்ளி தாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. திடீரென இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஒரு பள்ளி தாக்கப்பட்டதற்காக மொத்தமாக பள்ளிகளை மூடுவதா?

இது ஏதோ வேறு ஒரு திட்டம் போல தெரிகிறது. இதற்கு பின் வேறு சிலர் இருப்பது போல தெரிகிறது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு தனியார் பள்ளிகள் பலவும் இந்த அறிவிப்பை பின்பற்ற தயாராக இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் ஒரு நாள் மட்டும் அடையாள போராட்டம் நடத்த போவதாக பின் வாங்கியது.

அதோடு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பள்ளிகள் வர வேண்டும் என்று அகில இந்திய தனியார் மெட்ரோகுலேசன், நர்சரி, பிரைமரி, பள்ளிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் சில பள்ளிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் சில பள்ளிகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. சிறிய பள்ளிகள் சில இயங்காது என்று தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டன. இது மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தனியார் பள்ளிகள் இன்று கண்டிப்பாக இயங்கும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் சங்கங்கள் சில போராட்டங்களுக்கு அழைத்து இருந்தாலும் பள்ளிகள் நடக்கும். தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.