200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பது புதிய மைல் கல்- பிரதமர் மோடி பெருமிதம்..!!

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா  தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி உள்ளது.

இது ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் மாகாணத்தில்கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கியது.

அதன்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டன. இதில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியையும், பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியையும் கண்டுபிடித்தன. கோவிஷீல்டு மருந்தின் தயாரிப்பு உரிமையை இந்தியாவின் சீரம் நிறுவனம் பெற்றது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 200 கோடியைத் தாண்டியது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 18 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியதற்காக இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஒப்பிட முடியாத உயரத்தையும், வேகத்தையும் அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். கொரோனா  தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரை இது வலிமைபெறச் செய்தது’ என பதிவிட்டுள்ளார்.

கொரோனா  தொற்று ஒழிப்பு செயல்பாட்டுக் குழு தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் கூறும்போது, ‘200 கோடி டோஸை கடந்து சாதனை படைத்திருப்பது புதிய மைல் கல் ஆகும். நம்முடைய சொந்த தடுப்பூசியைக் கொண்டே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம் என்பதுதான் சிறப்பு. இந்த சாதனைக்கான பெருமை முழுவதும் நாட்டு மக்களுக்கும் நாட்டை வழி நடத்துபவருக்குமே சேரும்’ என்றார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமர் மோடி தலைமையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த சாதனை வரலாற்றில் பொறிக் கப்படும்’ என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும் 90 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,709 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 2,689 அதிகரித்து 1,43,449 ஆகி உள்ளது. இது இதுவரை கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 0.33 சதவீதம் ஆகும். 98.47 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 1.2 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரிகொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.23 சதவீதமாகவும் வாராந்திர சராசரி 4.55 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சக புள்ளி விவரத்தில் கூறப்பட் டுள்ளது.