அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை… மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டார் இபிஎஸ்..!

துரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் (தலைமை அலுவலகம்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், புதிய உறுப்பினர் சேர்ப்பு பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட உள்ளதாகவும், ஆக.20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான இலச்சினை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக ஆக20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அமையும். அதிமுக உடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். தமிழகத்தில் உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்.

அதிமுகவில் புதிதாக 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் அதிமுக சாதனை படைத்துள்ளது. எனவே, அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். அதிமுக காட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிரூபித்து காட்டிள்ளோம். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவுதான் தற்போது உடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டிகே சிவகுமார் செயல்படுகிறார் என குற்றசாட்டிய இபிஎஸ், மாமன்னன் படத்தில் தான் முதல்வரின் கவனம் உள்ளதாகவும், தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழித்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..