தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடக்கிறதாம் – பிரசாந்த் கிஷோர்..!

பாட்னா: ”தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என போலி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்தளாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி முதல் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள், கட்டட பணிகள், பானிபூரி, பஞ்சுமிட்டாய் விற்பனை, ஓட்டல் பணி, பெயிண்டிங் பணி , பண்ணை வேலைகள் என ஏராளமான பிரிவுகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வடமாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதால் ஏராளமானவர்கள் அவர்களை அழைத்து வந்து பணி வழங்கி வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் பனியன் தயாரிப்பு நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் பல வீடியோக்கள் பரவின. மேலும் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களில் இறங்கி செல்லும் வீடியோக்களும் வெளியாகின. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் வடமாநிலத்தவர்களால் பறிக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர். மேலும் தமிழ்நாட்டில் வேலை செய்யும் மக்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க கூடாது என பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இது ஒருபுறம் இருக்க சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் போலியாக வீடியோக்கள் பரப்பப்பட்டன. வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து துன்புறுத்துவதாக வீடியோக்கள் போலியாக வலைதளங்களில் பரவின. குறிப்பாக பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவதாக வதந்தி பரவியது. மேலும் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்தஊர் செல்ல ரயில் நிலையத்துக்கு தொழிலாளர்கள் வந்த நிலையில் அவர்கள் தாக்குதலுக்கு பயந்து வெளியேறுவதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டன. மேலும் முதல்வர் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இது பீகார் சட்டசபையில் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தமிழ்நாடு வந்து திருப்பூர், சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விசாரித்தனர். அப்போது தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என அவர்கள் அதிகாரிகள் குழுவினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து வதந்தி பரப்புவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றி அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்த அரசியல் வியூக வகுப்பாளரான இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோரின் கருத்த விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுபற்றி அவர், ”தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது போலி வீடியோக்கள் என துணை முதல்வர் கூறியுள்ளார். இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். இந்த விஷயத்தில் சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோக்களை பகிர்ந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்றார்.

முன்னதாக இந்த விவகாரத்தில் பீகார் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது, ”தொழிலாளர்கள் விஷயத்தை பீகார் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக குழு ஒன்று தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பீகார் மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. உண்மையை கண்டறிய அரசு குழு அங்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் உதவிகளுக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்