பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் தலைமறைவு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவருக்கு செங்குட்டு பாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என தங்களது மகளை கண்டித்தனர்.இதனால் சரவணன் தனது காதலியை சந்திக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த சரவணன் மாணவியை கடத்தி சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் மாணவியை அவர் திருமணம் செய்தார். பின்னர் சரவணன் மாணவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். மாணவியிடம் சரவணனின் பெற்றோர் விசாரணை நடத்தினர். அப்போது 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சரவணனின் பெற்றோர் மாணவியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த சரவணன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.