கோவை அருகே வடவள்ளி-மருதமலை ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற கோரியும் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசல் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய போராட்டமானது இரவாகியும் நீடித்தது. மாணவர்களின் போராட்டம் பற்றி அறிந்ததும் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டி மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மாணவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். முதல்வர் வந்து தங்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் மாணவர்களின் போராட்டம் விடிய விடிய நடந்தது. மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கொண்டு டார்ச்லைட்டை அடித்தபடி விடிய விடிய தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று காலை 2-வது நாளாக மாணவர்கள் கல்லூரிக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறும்போது, கல்லூரியில் இருந்து சில மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கையையும், வழக்கையும் திரும்ப பெற வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் மாணவர்களும் இடம் பெற வேண்டும். அத்துடன் எங்கள் கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, சட்டக்கல்லூரி அலுவலகத்தில் மாணவர்கள் சிலர் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தனர். இது பற்றி குழு அமைத்து விசாரணை நடந்தது. இதில் மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் தேவையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார். மாணவர்களின் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Leave a Reply