மீண்டும் மோடி அரசு தான் வேண்டும் என ஒட்டு மொத்த தமிழகமும் கூறுகிறது – வேலூரில் பிரதமர் மோடி பெருமிதம்.!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி, 2 நாட்கள் பயணமாக 6ஆவது முறையாக நேற்று மீண்டும் தமிழகம் வந்தார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்று வேலூர் சென்றுள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும், பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வேலூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நமது புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்குகிறது என சுட்டிக்காட்டி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக ஆதரவு இருக்கிறது. மீண்டும் மோடி அரசு வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் கூறுகிறது.” என்றார்.

இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். “விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.” என பிரதமர் மோடி கூறினார்.

திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது குடும்பத்துக்கு முக்கியத்துவம் தருகின்றன. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டின் இளைஞர்கள் முன்னேற முடியாத நிலை உள்ளது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இந்தியாவை தமிழ்நாடு வழிநடத்தும் நேரம் இது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

வேலூர் விமான நிலைய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். “உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலைய பணிகள் விரைவில் முடிக்கப்படும். வேலூர் மக்களின் கோரிக்கையை மனதில் வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுகிறது.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழ் மொழிக்கு தாம் அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் (வாரணாசி) எம்.பி.யான நான், காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தை சேர்ந்த பல குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. ஒரு குஜராத்தியாக, சௌராஷ்டிரா தமிழ் சங்கத்திற்கு உங்களை அழைக்கிறேன்.” என்றார்.

பிரதமர் மோடி பேசுகையில், “போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் இயங்குகின்றனர்? போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என கேள்வி எழுப்பினார். மேலும், சாதி, இனம், மதம், பிரதேசம் என மக்களை பிளவுபடுத்தி திமுக சண்டையிட வைப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

“பிரித்தாளும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் நாளில் திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள். திமுகவின் ஆபத்தான அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்த நான் முடிவு செய்துள்ளேன்.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்த போலித்தனத்தைப் பற்றி விவாதிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது, இவர்கள் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இதில் காங்கிரஸ் மௌனம் காப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கச்சத்தீவு அருகே சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரஸும் மீனவர்களுக்கு எதிரான குற்றவாளிகள் மட்டுமல்ல, இந்த தேசத்திற்கு எதிரான குற்றவாளிகள்.” என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.