ரஷ்யாவை முடித்துவிட வேண்டும் என மேற்குல நாடுகள் நினைக்கிறார்கள்.. நிச்சயம் அது ஒருபோதும் நடக்காது..புதின் பதிலடி ..!

மாஸ்கோ: உக்ரைன் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று திடீரென உக்ரைனுக்கு சென்றிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி ரஷ்யா மிக பெரிய போரை தொடங்கியது. உலகிலேயே மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றாக ரஷ்யா கருதப்பட்டதால், போர் சில நாட்களில் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும், உக்ரைன் நாட்டிற்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதேபோல உக்ரைன் ராணுவ வீரர்களும் துணிச்சலாக போராடினர். இதனால் ஓராண்டு நெருங்கும் நிலையில், இன்னுமே ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் பல உலக தலைவர்கள் உக்ரைனுக்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். போலாந்திற்கு விமானம் மூலம் சென்ற பைடன், அங்கிருந்து சுமார் 10 மணி நேரம் ரயிலில் பயணித்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். அவர் அங்கு செல்லும் வரை வெளியுலகத்திற்கு அவரது பயணம் குறித்து தெரியாது. அந்தளவுக்கு பயணம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிபர்கள் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போதுதான், கூடுதலாக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,135 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க பைடன் சம்மதித்தார். எளிதாக உக்ரைனை வென்றுவிடலாம் என்று புதின் நினைத்த நிலையில், அது தவறு என்று புதினை உக்ரைன் உணர வைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பைடனின் இந்த ரகசிய பயணமும் அவரது பேச்சும் ரஷ்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் பைடனுக்கு இப்போது ரஷ்ய அதிபர் புதின் பதிலடி கொடுத்துள்ளார்.

ரஷ்ய சட்டப்படி அந்நாட்டு எம்பிக்கள் மத்தியில் அதிபர் ஓராண்டிற்கு ஒரு முறையாவது உரையாற்ற வேண்டும். இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக 2022இல் அவர் ஒரு முறை கூட உரையாற்றவில்லை. இந்தச் சூழலில் தான் அவர் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், “படிப்படியாக, நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனமாகவும் முறையாகவும் தீர்ப்போம்.. உக்ரைனில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழலுக்கு மேற்குலக நாடுகளே முழுப் பொறுப்பு..

உக்ரைன் பதற்றம், போர், இத்தனை உயிரிழப்புகள் என்று அனைத்திற்கும் மேற்கத்திய நாடுகளே காரணம். உள்ளூர் பிரச்சினையை சர்வதேச மோதலாக மாற்ற மேற்குலகம் முயல்கிறது.. இதற்கெல்லாம் நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம். எங்கள் நாட்டின் இருப்பிற்காக நாங்கள் போராடி வருகிறோம். போரை ஆரம்பித்து வைத்ததே மேற்குலக நாடுகள் தான். இப்போது அதை முடிக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதை மேற்குலகம் அறிந்திருக்கிறது. இதன் காரணமாகவே ரஷ்யாவின் கலாச்சாரம், மதம் குறித்து தவறான தகவல்களை பரப்பி தகவல் போரை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவை முடித்துவிட வேண்டும் என்று மேற்குல நாடுகள் நினைக்கின்றன. இவை அனைத்தையும் நாங்கள் நிச்சயம் முறியடிப்போம். எங்களை வீழ்த்த மேற்குலக நாடுகள் எந்தவொரு முயற்சியை எடுத்தலும் அதில் வெற்றி கிடைக்காது” என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி தொடங்கியது. இதை ரஷ்யா இதுவரை போர் என்று கூறவில்லை.. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையில இருக்கும் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டி வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்களுக்கு ஆபத்து என்று புதின் கருதியுள்ளார். இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்துள்ளது.