மகாசிவராத்திரி: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு- சதுரகிரி சுந்தரமகாலிங்கரை தரிசிக்க 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமியை தரிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி சிவாலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிப்பட்டால் வாழ்வில் எந்த தீங்கும் நேராது என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக இன்று காலை முதல் பக்தர்கள் விரதமிருந்து சிவனை வழிபட தொடங்கிவிடுவார்கள். இன்று காலை தொடங்கும் விரதம் அடுத்த நாள் காலையில்தான் முடிவடையும்.

விரதத்தின் முக்கிய நோக்கமாக முக்தி இருக்கிறது. ஆகவே அடிப்படையான விஷயங்களான உணவு மற்றும் உறக்கத்தை துறந்து சிவனிடத்தில் சேர்வதுதான் மகாசிவராத்திரியின் வழிபாடாகும். சிலர் வீட்டில் உள்ள சிவன் படங்களுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கினாலும் பலரும் கோயிலுக்கு சென்றுதான் வழிப்படுகின்றனர். எனவே இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்துள்ளனர். இந்த மலை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உரிய அனுமதியின்றி மலைக்குள் பிரவேசிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இக்கோயிலுக்கு செல்ல வனத்துறையினரின் அனுமதி தேவை. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து தற்போது வனத்துறை கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் 21ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது. அதேபோல சளி, காய்ச்சல் உள்ளவர்களும், 10 வயதுக்கு குறைவானவர்களும் 60 வயதுக்கு அதிகமானவர்களும் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் மலை ஏறுபவர்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவ்வாறு மலை ஏறுபவர்கள் வழியில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இக்கோயிலுக்கு செல்ல மதுரை வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் வத்திராயிருப்பு மற்றும் தேனி வருசநாடு என மூன்று பகுதிகளிலிருந்து வழிகள் இருக்கின்றன.

இருப்பினும் வத்திராயிருப்பு பகுதியிலிருந்து செல்லும் பாதை எளிதானது என்பதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர். எனவே இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது.

சதுரகிரி கோயிலை சென்றடைய வேண்டும் எனில் பக்தர்கள் வழயில் எதிர்படும் காட்டாறுகளை எதிர்கொள்ள வேண்டும். வழக்கமாக இந்த ஆறுகள் வறண்டு காணப்பட்டாலும் திடீரென பெய்யும் மழை காரணமாக எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இங்க வனத்துறையினரின் கண்காணிப்பு அதிகம். மகாசிவராத்திரியான இன்று பகலில் 4 கால பூஜையும், இரவில் 4 கால பூஜையும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு செய்யப்படுகிறது.