ஆட்டோவுக்குள்ளே பாலியல் தொல்லை கொடுத்த உபேர் ஓட்டுனர்… பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை..!

சென்னை : சென்னை அருகே தனது தோழியுடன் சென்ற போது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் என்ற கல்லூரியில் மாணவ பத்திரிகையாளராக படித்து வரும் பெண் சமூக வலைதளத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் சோழிங்கநல்லூரில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் அவர், தோழி ஒருவருடன் ஈசிஆரிலிருந்து நேற்று இரவு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு உபர் ஆட்டோ மூலம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் வந்தவுடன் இறங்கும் போது ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு கதறியதாகவும் உதவிக்கு யாரும் வரவில்லை என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பின் காவல்துறையில் புகார் அளித்தும் அரை மணி நேரத்திற்கு கழித்து பெண் போலீஸ்சார் இல்லாமல் காவலர் ஒருவர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தான் தங்கியிருக்கும் ஓட்டலில் ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோதும் அதை தடுக்கும் விதமாகவே காவலர் பேசியிருக்கிறார். அதன்பின் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்ற பிறகும் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் காவல் நிலையத்தில் வெளியிலேயே புகாரை எழுதி வாங்கிக் இருக்கிறார் அந்த காவலர்.

அதன்பின் திங்கட்கிழமை காலை பெண் போலீசார் ஒருவர், அந்த மாணவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டதாகவும் , ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பு கொள்ள எந்தவித செல்போன் எண்ணையும் பெண் காவலர் தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை சமூக வலைதள பக்கங்களை இணைத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் புகார் அளிக்கும் போது சம்பந்தப்பட்ட ஆட்டோ புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்தது தொடர்பான தகவல்கள் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் புகைப்படம் ஆகியவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டுருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் பரவியது. இதற்கு பதில் அளித்த சென்னை காவல்துறை தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட தாம்பரம் காவல்துறைக்கு டேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உபர் நிறுவனமும் சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கடந்த விவகார தொடர்பாக தகவல்களையும் கேட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாக தாம்பரம் காவல்துறை சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளது.