காலியாகி போன பஞ்சாப் அரசின் கஜானா… சம்பளம் இல்லாமல் அரசு ஊழியர்கள் தவிப்பு..!

ஞ்சாப் அரசின் கஜானா காலியாக இருப்பதால், செப்டம்பர் மாதம் பிறந்து 6 நாட்களாகியும அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆகஸ்ட் மாத ஊதியம் தரப்படவில்லை.

வழக்கமாக முந்தைய மாத ஊதியத்தை அடுத்த மாதம் முதல் தேதிஅல்லது 31ம் தேதி இரவிலேயே ஊழியர்கள் வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும். இதுதான் முறையாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்து 6 நாட்களாகியும் இன்னும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை.

பஞ்சாப் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் ” பஞ்சாப் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு முறை முடிவுக்கு வந்துவிட்டதால் நிதிஆதாரங்கள் இல்லாமல் அரசு தடுமாறுகிறது. கடந்த நிதியாண்டில் பஞ்சாப் அரசுக்கு ரூ.16ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடாகக் கிடைத்தது.இந்த ஆண்டு முதல் காலாண்டுக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி இழப்பீடு கிடைத்துள்ளது.” எனத் தெரிவித்தனர்.

ஒரு சில அரசு அதிகாரிகள் கூறுகையில் ” ஆம்ஆத்மி அரசு அரசு ஊழியர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்கிவிடும், மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒருமுறைகூட ஊதியம் தாமதமானது இல்லை. ஆனால் முதல்முறையாக ஊதியம் தாமதமாகிறது. ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் ஊதியமாக ரூ.2,597 கோடி தேவை. ஆண்டுக்கு ரூ.31,171 கோடி ஊதியத்துக்கு மட்டும்தேவை.

சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், அரசு ரூ.1000 கோடி வட்டி செலுத்த வேண்டியிருந்தது. இதனால்தான் ஊழியர்கள் ஊதியத்துக்காக ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், சி பிரிவு மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஏற்கெனவே ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இது தவிர மின்சாரத்துக்கு மானியமாக ரூ.20ஆயிரம் கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரூ.18ஆயிரம் கோடி இலவச மின்சாரத்துக்கு சென்றுவிடும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, தொழில்துறையினருக்கு மின்சாரத்தில் மானியம் வழங்கப்பட வேண்டும்.

அது தவிர வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் ஆகியவற்றையும் அ ரசு சமாளிக்கவேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்இருந்து மின்சார வாரியத்துக்கு அரசு செலுத்த வேண்டிய ரூ.1,298 கோடி நிலுவையில் இருக்கிறது.

அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் மின்சாரத்தில் மானியம் வழங்குவது ஆகியவை அரசுக்கு மிகப்பெரிய அளவில் சுமையாக இருந்து வருகிறது. இது தவிர பஞ்சாப் அரசு வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.20,122 கோடி வட்டி செலுத்துகிறது, ரூ.15,145 கோடி ஓய்வூதியத்துக்கும், ஓய்வுகாலப் பலன்களுக்கும் செல்கிறது. இது தவிர கடன் வாங்கியதற்கு தவணையாக ரூ.27,927 கோடியும், திருப்பிச் செலுத்தும் தொகையாக ரூ.20 ஆயிரம் கோடியும் அரசு செலுத்த வேண்டும்.

அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் ” ஆம் ஆத்மி அரசு தேர்தலில் மிகப்பெரிய வாக்குறுதிகளை வழங்கிவிட்டது. அதை இப்போது சமாளிக்க முடியாமல் திணறுகிறது. அந்த வாக்குறுதிபாதிப்புதான் மாநிலத்தின் நிதிநிலையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு வரும்வரை அரசு சமாளித்தது. இழப்பீடு முறை நிறுத்தப்பட்டவுடன் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல் டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தீனதயாள் உபாத்யயா கல்லூரிக்கு தேவையான நிதிகளை இன்னும் ஒதுக்கவில்லை. இதனால், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் கல்லூரியை நடத்தும் வகையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மின்சார சேமிப்பு, செயல்பாட்டுக் கட்டணம், பராமரிப்புச் செலவு ஆகியவற்றுக்காக இதுவரை டெல்லி அரசு நிதியை விடுவிக்கவில்லை. பேராசிரியர்களுக்கும், உதவி பேராசிரியர்களுக்கும், இன்னும் ஊதியம் வழங்கவில்லை என்பதால் அவர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.